ரமலான் கடைசி 10 இரவு நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ரமழானின் கடைசி10 நாட்களில் இரவுகளில் சூரா இக்லாஸ் 3 முறை ஓதுவதால் ஒரு முழு குர்ஆனை 84 வருடங்கள் ஓதிய நன்மை எழுதப்படும் இதை யார் பிறருக்கு சொல்வாரோ அதன் பலனும் நம் நன்மை பட்டியளில் சேர்ந்து விடும்.

இதுபோன்ற ஒரு செய்தி தற்பொழுது சமூக வளைத்தளங்களில் பரவுகிறது..
இதன் உண்மைதன்மை என்ன என்பதை பார்ப்போம்:

1.மகத்துவமிக்க இரவில் இதை குர்ஆனை நாம் அருளினோம்.
2.மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
3.மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
4.வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.
5.ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
திருக்குர்ஆன்  97:1-5

இந்த அத்தியாத்தில் அல்லாஹ் தெளிவாக மகத்துவமிக்க இரவைப்பற்றியும், அந்த இரவின் சிறப்பைப்பற்றியும் சுட்டிக்காட்டிகிறான்...

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின்,
முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!
ஸஹீஹ் புகாரி அத்தியாயம்(2014)

மகத்துவமிக்க இரவானது வைகறை அதாவது காலை ஃபஜருக்கான நேரம் வரை இருக்கின்றது,
கத்ருடைய இரவுகளில் ஃபஜருக்கான நேரம் வரை தொழுகையில் ஈடுபடலாம்.

இந்த மகத்துவமிக்க இரவு எந்தநாளில் வரும் என்பதை சொல்லாமல் பொதுவாக நபிகள் நாயகம்(ஸல்) ரமலான் கடைசி பத்து நாட்களில் அதுவும் ஒற்றைப்படையில் தேடுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்...

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
-என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம்(2017)

ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஒரு நாளான லைலத்துல் கத்ருடைய இரவு ரமளான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் ஏதே ஒரு இரவில் உள்ளது என்பதை இந்த அறிவிப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது!

ரமளானில் கடைசி பத்து நாட்களில் நாம் என்ன மாதிரியான இபாதத்களில் ஈடுபடு வேண்டும்?

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! எனக் கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம்(2020)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரமளான் கடைசி 10 நாட்களில் இஃதிகாஃப் இருக்கக்கூடியவர்களா இருந்துள்ளார்கள்,

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
ரமளானின் கடைசிப் பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள், இரவை அல்லாஹ்வைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள், இறைவனை வணங்குவதற்காகத் தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2024

இஃதிகாப் இருப்பதால் ஒரு மனிதனுக்கு உலக தொடர்புகள் அனைத்தும் தேவையில்லாத ஒன்றாக ஆகிவிடும், முழுக்க முழுக்க இறைசிந்தனை, குர்ஆனை ஓதுவது, திக்ரு செய்வது, மார்க செய்திகளை மட்டும் பேசுவது இப்படி உலக சிந்தனையை தூக்கி எறிந்து இறைவனையே சார்ந்திருக்கும் ஒரு அழகிய சித்தாந்தத்தை இஃதிகாப் ஏற்படுத்துகிறது...

லைலத்துல் கத்ருடைய இரவில் ஒருவர் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார் என்றால்!
அதற்கான கூழி? 1000 மாதங்கள் நாம் என்ன அமல்கள் செய்கிறோமோ அதைவிட சிறந்ததாக லைலத்துல் கத்ருடை இரவை அடைபவர்களுக்கு கிடைக்கும், அதோடு சேர்த்து நாம் செய்த முன் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம்(ஸல்) ரமலான் கடைசி பத்து நாட்களில் இல்லறத்தொடர்பை நிறுத்தி கொள்ளக்கூடியவர்களா இருந்துள்ளார்கள்,
அதுமட்டுமல்லாமல் தமது வீ்ட்டு பெண்களையும் வணக்கப்பழிகாடுகளில் ஈடுபடுத்த கூடியவர்களாக இருந்தள்ளார்கள்!

ரமலான் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் முழுக்க முழுக்க அதிகமாக இறைச்சிந்தனையில் கழிக்கவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்த அமல்களை லைலத்துள் கத்ரு இரவுகளில் ஒரு மனிதர் செய்தாலே போதுமானது, இவைகளைதான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரமலான் கடைசி 10 இரவுகளில் செய்துள்ளார்கள்.

சூரத்துல் இக்லாஸ் ரமலான் கடைசி 10 நாட்கள் ஓத வேண்டுமா?
மாறாக எல்லா நாட்களிலும் ஓத வேண்டுமா?
சூரத்துல் இக்லாஸுடைய சிறப்புகள் என்ன?

இந்த அத்தியாயத்திற்கு இக்லாஸ் என்று பெயர். இக்லாஸ் என்பதற்கு மனத்தூய்மை, உளத்தூய்மை என்று பொருள். இந்த அத்தியாயத்தை விரிவாகத் தெரிந்து கொண்டால், ஏகத்துவத்தின் அனைத்து அம்சங்களும் நமக்கு விளங்கிவிடும்.

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்:
ஒருவர் (குல்ஹுவல்லாஹு அஹத்)எனும் 112 வது அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார்.
இதைக்கேட்ட அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.
அந்தச் சிறிய அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 5013

சூரத்துல் இக்லாஸ் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானது, குர்ஆனில் சொல்லப்படும் ஏகத்துவ தகவல்கள் அனைத்தும் இந்த ஒரு வசனத்தில் அல்லாஹ் இரத்தினச்சுருக்கமாக சொல்லிவிட்டான்...

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன்.
அப்போது அவர்கள் சூரத்துல் இக்லாஸ் என்ற 112 ஆவது அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஒருவர் ஓதுவதைச் செவியுற்றார்கள்.
அதற்கு நபியவர்கள், அவருக்குக் கடமையாகி விட்டது என்று கூறினார்கள். உடனே நான் நபியவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்ன கடமையாகி விட்டது? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், சொர்க்கம் கடமையாகி விட்டது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயி 984

ஒருவர் இக்லாஸ் சூராவை பொருளுணர்ந்து ஓதுவதால் சொர்கம் கிடைக்கும் என்பதை நபி(ஸல்) அவர்கள் இந்த அறிவிப்பில் குறிப்பிடுகிறார்கள்,
வெறுமென கடமைக்கு ஓதுவதால் அதற்கான பலன் கிடைக்காது, அதேபோல இணைவைப்பின் சாயல்களை பின்பற்றியவர்களுக்கும் இது பயனளிக்காது என்பதை புறிந்துகொள்ள வேண்டும்..

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் குல்ஹுவல்லாஹு அஹது என்ற அத்தியாயத்தை விரும்புகிறேன் என்று சொன்னார். அப்போது நபியவர்கள், இந்த அத்தியாயத்தை நேசிப்பதே உன்னை சொர்க்கத்தில் நுழைக்கச் செய்ய போதுமானதாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அஹ்மத் 11982,12054

வெறுமென ஒரு மனிதர் இந்த சூரவை விரும்பவில்லை மாறாக அதன் விளக்கம் ஆழமான கருத்தை சொல்கிறது என்பதை அந்த மனிதர் விளங்கி வைத்து விரும்புகிறார், படைப்பாளனின் பண்பை நான்கு வரிகளில் அழகாக சொல்வதால் அதை அந்த மனிதர் அதை விரும்புகிறார் இதனால் சொர்கம் கிடைக்கும் என்று நபி(ஸல்) சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி ஓர் இரவில் குர்ஆன் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?
என்று கேட்டார்கள். ஒரே இரவில் எவ்வாறு குர்ஆன் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்? என்று மக்கள் கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் குல் ஹுவல்லாஹு அஹத் என்று தொடங்கும் 112 ஆவது அத்தியாயம் குர்ஆன் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 1477 மற்றும் புகாரி 5014.

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், மக்களே!
ஒன்று கூடுங்கள், நான் உங்களுக்குக் குர்ஆன் மூன்றிலொரு பகுதியை ஓதிக்காட்டப் போகிறேன் என்று கூறினார்கள்.
அப்போது மக்கள் ஒன்று கூடினர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே புறப்பட்டு வந்து குல் ஹுவல்லாஹு அஹத் எனத் தொடங்கும் 112 வது அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு தமது இல்லத்திற்குள் சென்று விட்டார்கள். அப்போது எங்களில் சிலர் சிலரிடம், அவர்களுக்கு ஏதேனும் செய்தி வந்திருக்கிறது போலும்.
அதன் காரணமாகவே அவர்கள் உள்ளே சென்று விட்டார்கள் என்று கருதுகிறேன் என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து நான் சற்றுமுன் உங்களிடம் குர்ஆன் மூன்றிலொரு பகுதியை ஓதிக்காட்டுவேன் எனக் குறிப்பிட்டேன்.
அறிக: அந்த (112ஆவது) அத்தியாயம் குர்ஆன் மூன்றிலொரு பகுதிக்கு ஈடானதேயாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 1479

இரவில் சூரத்துல் இக்லாஸ் ஓதுவதால் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதியதற்கு சமம்,
மூன்றில் ஒரு பகுதிகான நன்மை நமக்கு கிடைக்கிறது, சூரத்துல் இக்லாஸை குறிப்பிட்ட ரமலான் மாதம் கடைசி 10 நாட்களில் தினமும் 3 முறை ஓதியதாக சொல்லப்படவில்லை மாறாக தினமும் இரவுகளில் ஓதுங்கள் என்பதைதான் இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.

இக்லாஸின் மூலம் பாதுகாப்புத் தேடுவது சம்மந்தமானவை:

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள்.
பிறகு தம் இரு கைகளால் அவை எட்டும் அளவிற்கு தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி,
நூல்: புகாரி 5016,5017.

இரவில் தூங்க செல்வதற்குமுன் சூரத்துல் இக்லாஸ் அத்தியாத்துடன் சேர்த்து மற்ற இரண்டு அத்தியாங்களையும் ஓதி உடம்பில் தடவி உறங்க கூடியவர்களாக நபிகள் நாயகம்(ஸல்) இருந்தள்ளார்கள்.

தொழுகையில் சூரத்துல் இக்லாஸ் ஓதுவதின் சிறப்புகளை பார்ப்போம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: மக்ரிபுடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களிலும், ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்களிலும் குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்று தொடங்கும் 109 வது அத்தியாயத்தையும், குல் ஹுவல்லாஹு அஹத் என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயத்தையும் ஓதுவதை நான் சுமார் இருபது முறையேனும் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: நஸாயீ 982

அதேபோல ஹஜ், உம்ராவில் தவாஃபிற்க்கு பிறகு இரண்டு ரக்காத் தொழுகையில் சூரத்துல் காஃபிரூன் மற்றும் சூரத்துல் இக்லாஸ் ஓத சொல்லியுள்ளார்கள்

அதேபோல வித்ரு தொழுகையில் சூரத்துல் இக்லாஸ் ஓதளசா்லியுள்ளார்கள்...

இப்படி சூரத்துல் இக்லாஸுடைய சிறப்புகள் தனிதன்மை வாய்ந்ததாக உள்ளது...

ஒரு முஸ்லிம் இந்த அளவுகளில் சூரத்துல் இக்லாஸை நம்பி அதன் அடிப்படையில் அமல்களை செய்ய வேண்டும்...

குறிப்பிட்ட ரமலான் மாதம் கடைசி 10 நாட்களல் 3 முறை ஓதினால் 84 வருடங்கள் குர்ஆன் ஓதியதற்கு சமம் என்று பரப்புவது ஆதாரமற்றவைகளாகும்...

ரமலான் கடைசி 10 நாட்களில் நாம் என்ன அமல்களை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு விளக்கி சொல்லியுள்ளதை பின்பற்றுவோம் மறுமையில் வெற்றி பெறுவோம்!

நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்:

ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்ளால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதைச் செய்யாமல் விட்டுவிடுங்கள்

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
நூல்-புகாரி:7288

ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments