நன்மையின் எடையை அதிகப்படுத்துவோம்!

ஏக  இறைவனின் திருப்பெயரால்...

மறுமை வாழ்க்கையில் வெற்றி என்பது நமது அமல்கள் மூலம் செய்யப்படும் நன்மையின் வாயிலாக எடையை அதிகரிக்கச் செய்வதிலயே உள்ளது.
மறுமை வாழ்க்கையில் நிச்சயம் நமது உலக வாழ்கையை இறைவன் மீஸான் என்னும் தராசின் மூலம் அளந்து பார்ப்பான்.

அந்த கடுமையான நேரத்தில் நமக்கு சொர்க்கம் என்னும் வெற்றிவாகை சூட நமது நல்ல அமல்கள் மட்டுமே பேருதவியாக இருக்கும் என்பதில் கடுகளவுகூட சந்தேகம் இல்லை!
மறுமையில் நமது அமல்களை இறைவன் அளந்து பார்ப்பான் என்பதை மேற்கண்ட சில வசனங்களில் வாயிலாக அறியலாம்.

وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ ۚ فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. நன்மையின் எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர்.
 திருக்குர்ஆன்  7:8]

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ

யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான .வாழ்க்கையில் இருப்பார்
[திருக்குர்ஆன்  101:7]

இந்த இரண்டு வசனங்களிலும் நமது அமல்களை நிச்சயம் இறைவன் மதிப்பீடு செய்வான் என்பதை உறுதியாக அறிவிக்கிறது.
அதேபோல் மறுமையில் தோல்வி என்பதும் உண்டு! நமது நன்மையின் எடை கனமாக இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.

وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ

எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.
[திருக்குர்ஆன்  23:103]

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ

யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.
[திருக்குர்ஆன்  101:9]

இந்த வசனங்களில் எவருடைய எடைகள் லேசாக உள்ளதோ அவரின் மறுமை வாழ்க்கை நரகம் என்பதை இறைவன் பகிரங்கமாகவே எச்சரிக்கை செய்கிறான்.

அதனடிப்படையில் நாம் அதிகமாக அமல்களின் பக்கமே நமது கவணத்தை வைத்திருக்க வேண்டும்!
அமல்களை ஏன் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும்? என்ற காரணத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக உபதேசம் செய்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று வரவிருக்கும் குழப்பத்திற்கு முன்னால் நற்செயல்களில் போட்டி இடுங்கள். அந்தக் குழப்பம் வந்தால் ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-186

ஒரு குழப்பமான காலக்கட்டம் நம்மை நோக்கி வரவுள்ளது! அக்காலக்கட்டத்தில் நமது ஈமானுக்கு உத்திரவாதம் இல்லை! ஈமானில் உறுதியாக உள்ளவர்கூட தடுமாறும் சூழ்நிலை உருவாகும் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சுட்டிகாட்டியுள்ளார்கள்.
அதற்கு முன்பு நமது செயற்பாடுகளை சீராக்கி கொள்வோம்.

மறுமையில் நமது நன்மையின் எடையை அதிகரிக்கச் செய்யும் சில சுலமான அமல்களை பார்ப்போம்:

அதிக நன்மைகளை பெற்று தரும் அழகிய திக்ருகள்...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், நன்மையின் தராசில் கனமானதாகவும் இருக்கின்றன.

 سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கிறேன். அவனை போற்றி 
புகழ்ந்து துதி செய்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7563

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:
பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்..


لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

[லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர்.]

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
ஆதாரம்: புகாரி 3293

முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் பதிவு செய்யும் நன்மைகள்...

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

 'அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' 

பொருள்: புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும், சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்.
அறிவிப்பவர்: ரிஃபாஆ இப்னு ராஃபிவு(ரலி)

ஸஹீஹ் புகாரி : 799.

இதுபோன்ற அதிக நன்மைகளை பெற்று தரும் திக்ருகளுக்கு ஒழு தேவைப்படாது!
கிப்லாவை முன்னோக்க வேண்டியதில்லை!
செல்வத்தை செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை! உடலால் சிரமப்படத் தேவையில்லை! இலகுவாக நன்மைகளை கொள்ளையடித்து செல்லலாம்.

அதேபோல் உபரியான நோன்பின் நன்மைகள்...
மாதத்தில் முன்று நோன்பு:
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம்-2151

நீங்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதைப் பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள் வியாழன் நோன்பு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை மற்றும் வியாழன் கிழமை ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.
அறிவிப்பவர்: அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

ஒவ்வொரு வியாழன் கிழமையும், திங்கள் கிழமையும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹீரைரா(ரலி)
நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா

மாதத்தில் மூன்று நோன்பு மற்றும் திங்கட்கிழமை, வியாழன்கிழமை வைக்கப்படும் நோன்பின் மூலம் அதிகமான நன்மைகளை கொள்ளையடிக்கலாம்.

சுன்னத் தொழுகையின் மூலம் கிடைக்கும் நன்மைகள்...
சுன்னத்தான தொழுகைகள் அமல்களில் சிறந்தவை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உறுதியாக இருங்கள். சலிப்படையாதீர்கள். அமல் செய்யுங்கள். உங்களது அமல்களில் சிறந்தது தொழுகையாகும்.
முஸ்லிமான ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக தினமும் கடமை அல்லாத சுன்னத்தான தொழுகைகள் 12 ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை வழங்கப்படாமல் இருப்பதில்லை. அல்லது அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவி உம்மு ஹபீபா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
முஸ்லிம்: 728-103, அபூதாவூத்:1250

நாள் ஒன்றுக்கு உபரியான 12 ரக்காத்துகள் தொழுகையை தொழுது வந்தால் சொர்கத்தில் ஒரு மாளிகையை தட்டி செல்ல வாய்ப்புள்ளது.

அதேபோல் நமது அமல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நாம் செய்யக்கூடிய சிறு சிறு பாவங்கள், அறியாமல் செய்யக்கூடிய பாவங்கள், வேண்டுமென்றே செய்யக்கூடிய பாவங்கள், தீமைகள் என ஏராளமாக அடுக்கி கொண்டே போகலாம்...

நமது அனைத்து பாவங்களுக்கும் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு சரணடையும், பாவமன்னிப்பிற்கான ஆழமான கருத்தை கொண்ட ஒரு துஆவை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு கற்று கொடுத்துள்ளார்கள்.

இந்த துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான்.

اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

இறைவா! நியே என் எஜமான்! உன்னை
 தவிற வணக்கத்திற்குறியவன் யாரும் இல்லை.
நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின் படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நீ எனக்கு செய்த அருளோடும். நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னை தவிற யாரும் 
பாவங்களை மன்னிக்கமுடியாது.

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] -
லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து  அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய வஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B]ப[F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த.
நூல்: புகாரி-6309

ஆழமான அற்தங்களை கொண்ட இந்த துஆவை நம்பிக்கையுடன் மனனம் செய்து அனுதினமும் ஓதி இறைவனின் மன்னிப்பை பெறுவோம்.
இந்த இலகுவான அதிகம் நன்மைகளை பெற்று தரும் அனைத்து அமல்களையும் நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி மறுமையில் நமது நன்மையின் எடையை அதிகரிக்கச் செய்வோம்.
இறைவன் நமது அமல்களை ஏற்றுக்கொள்வானாக.

ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments